மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதம்: அமைச்சர் பெசில் ராஜபக்ஷ
வெளிச்சக்திகளின் அழுத்தம் காரணமாகவே மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாமல் இருந்தால் மீள் குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரங்களை மேலும் வலுப்படுத்தியிருக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பெரும்போகக் காலப்பகுதியில் குறித்த இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றவே தாம் திட்டமிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்போக பகுதியில் மீள் குடியேற்றப்படுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய சாத்தியம் கிட்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், அழுத்தங்கள் காரணமாக திட்டமிடப்பட்ட காலப்பகுதிக்கு முன்னதாக இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் வரவேற்பதாக அறிவித்துள்ளன.
அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போது பெசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் சுதந்திரமான முறையில் நடமாடுவதற்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது மகிழ்ச்சிகரமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மிகவும் சவால் மிக்க நடவடிக்கை எனவும் உரிய முறையில் திட்டமிட்டு கிரமமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மீள் குடியேற்றப்பட்ட பிரதேச மக்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply