அனைத்து தொழிற்சாலைகளையும் முதலீட்டு சபையின் கீழ் கொண்டுவருமாறு ஜனாதிபதி பணிப்பு
முதலீட்டு வலயங்களுக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் முதலீட்டுச் சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.மேல் மாகாண அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை பாணந்துறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிப்பதுடன் அவற்றை சுவீகரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை பணித்தார். அவ்வாறான செயலிழந்த தொழிற் சாலைகள் விசேட வரிச் சலுகைகளை அனுபவிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மக்களினதும் நாட்டினதும் தேவைகளுக்கேற்பவே அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டங்களை ஆரம்பிக்கு முன் அவற்றை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்யும் வகையில் முறையாக திட்டமிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அரசாங்க அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.
எந்தவித நிர்மாணமும் இடம்பெறாமல் உள்ள இடங்களில் நாட்டப்பட்டுள்ள அடிக்கற்களை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, போதிய நிதி இன்றேல் அவ்வாறான பாதியில் உள்ள அல்லது முடிக்க முடியாத நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் முறையான நிர்மாண நியமங்களுக்கு அமையாத வகையில் கட்டட நிர்மாணங்களில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் பற்றியும் ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே அவ்வாறான நிர்மாண வேலைகள் இடைநடுவில் கைவிடப்படுவதாக ஜனாதிபதி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply