அமெரிக்காவுக்கு எதிராக இம்ரான்கான் பேரணி

அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதை எதிர்த்து வசீரிஸ்தான் நோக்கி அமைதி பேரணியை, இம்ரான்கான் தொடங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டார்கள்.  பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இது பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். இதில் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் உயிர் இழப்பதாக புகார் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த குண்டு வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாத் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த குண்டு வீச்சை நிறுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைதி பேரணி நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.

பேரணி சென்றால் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடக்கலாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த மிரட்டல்களை மீறி இம்ரான்கான் நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து அமைதி பேரணியை தொடங்கினார். அவருடன் இந்த பேரணியில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி மற்றும் 130 வாகனங்களில் தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.

இவர்கள் வடக்கு வசீரிஸ்தானில் உள்ள கோத்கை கிராமத்தை இன்று சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இம்ரான்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தலீபான்களால் எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. பாகிஸ்தான் அரசாங்கம் தான் இந்த பேரணியை நிறுத்த முயற்சி செய்கிறது. யாருக்கும் எதிராக இந்த பேரணியை நடத்தவில்லை. பழங்குடியினர் பகுதியில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு அரசாங்கம் தனது கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும்.

அமெரிக்கா நடத்தும் உளவு விமானம் குண்டு வீச்சை கண்டிக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு ஆதாயம் இருப்பதால் ரகசியமாக அதற்கு துணை போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply