அநுராதபுர மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி கைது
இலங்கையில் அநுராதபுரம் மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வந்த டாக்டர் சிவசங்கர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கொக்காவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரினால் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கை அரச மருத்துவர் சங்கத்தின் முன்னாள் யாழ்ப்பாணக் கிளைத் தலைவராகிய டாக்டர் சிவசங்கர், கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தாய்ச் சங்கத்திற்கு யாழ் அரச வைத்தியர் சங்கத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தாங்கள் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டிருப்பதாக, அரச மருத்துவர் சங்க முக்கியஸ்தராகிய டாக்டர் சாயி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சிவசங்கர் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவர் சங்கம் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருப்பதாகவும் டாக்டர் சாயி நிரஞ்சன் கூறியுள்ளார்.
எனினும் டாக்டர் சிவசங்கர், என்ன காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பது பற்றிய விபரங்களை உடனடியாக அறிய முடியவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் சிவசங்கரைச் சந்திப்பதற்கான அனுமதியை பொலிசார் வழங்கியிருப்பதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாங்குளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply