புத்தாண்டு சன நெரிசலில் 71 பேர் பலி; 120 பேர் காயம்
புத்தாண்டையொட்டி ஏற்பட்ட சனநெரிசலில் அகப்பட்டு 71பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 120 பேர் காயமடைந்துள்ளனர்.ஐவரிக் கோஸ்ட்டில் இடம்பெற்ற சன நெரிசல் காரணமான 61பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அங்கோலாவிலும் புத்தாண்டு சன நெரிசல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 120 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐவரிக் கோஸ்ட்டின் அபிட்ஜன் பகுதியிலேயே மேற்படி சன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு 3 நாள் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
அரங்கமொன்றில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இவ்வானவேடிக்கை நிகழ்வின் பின்னர் ஒரு சிறிய பாதையால் இம்மக்கள் வெளியேற முற்பட்டபோதே நெரிசலில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன்போது பலர் சன நெரிசலில் அகப்பட்டதுடன்,மூச்சுத்திணறியும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் 15 வயது அல்லது அதற்கு குறைந்தவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதேவேளை, இந்த உயிரிழப்புக்கள் தேசிய துக்கமாகுமென அந்நாட்டு ஜனாதிபதி அலஸ்ஸனே ஒட்டாரா அறிவித்துள்ளார்.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சென்று பார்வையிட்ட அந்நாட்டு ஜனாதிபதி, மருத்துவச் செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply