வடக்கில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மூடும் நிலை : ஸ்ரீதரன்

வடக்கு – கிழக்கில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற இன்றைய காலகட்டத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைக்கப்பட்டுள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன், குறித்த பயிற்சிக் கலாசாலை வினைத்திறன் மிக்கதாக செயற்படுவதற்கு வழிவகைகளை மேற்கொள்ளுமாறு உயர் கல்வி அமைச்சரிடம் நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலையின் ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் மீது நடைபெற்ற மேற்படி விவாதத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு – கிழக்கில் ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆயிரக்கக்ணக்கான ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுகின்றன. இதற்கான பரிகாரங்கள் தேடப்படாத நிலையில் வடக்கு – கிழக்கின் ஆசிரியர் உள்வாங்கல் அல்லது நியமனங்களின் போது பிற்போக்குத் தன்மை ஒன்று காணப்படுகின்றது.

ஆங்கில மொழி மூலத்தில் பல பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கிய பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது யுத்தத்தின் காரணத்தால் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் கோப்பாய் பயிற்சிக் கலாசாலையுடன் இயங்கிவந்த பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இன்று மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆங்கில ஆசிரியர்களை உருவாக்கக் கூடிய இக்கல்லூரி தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களை  விட தேசிய கல்வி நிறுவனமே அதிகளவிலான பட்டப்படிப்பை வழங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனமானது மீபேயில் மட்டுமே இயங்கி வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் மீபேக்கு வரவேண்டிய தேவை ஏற்படுகின்றது.

எனவே, தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ் மொழிமூல கிளை ஒன்றினை வடக்கு – கிழக்கில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதன்மூலம் வினைதிறன் மிக்க ஆசிரியர்களையும் பாட சாலைகளையும் உருவாக்க முடியும்.

மேலும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற பட்டங்களுக்கு அமைவாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பெறப்படுகின்ற பட்டங்களும் மதிக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், கிளிநொச்சியில் இயங்கி வந்த பொறியியல், விவசாய பீடங்கள் யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு மாற்றப்பட்ட விவசாய பீடமானது மீண்டும் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படாத நிலை நீடித்து வருகின்றது. எனவே, கிளிநொச்சியில் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply