ஜெனிவாவில் எத்தகைய தீர்மானம் வரினும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றோம் : இராணுவத்தளபதி ரத்நாயக்க
சர்வதேசத்தின் விருப்பத்தின்படி நாட்டை மாற்றியமைக்க முடியாது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எவ்வாறான தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் வடக்கிலிருந்து ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்ற மாட்டோம் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எம்.டி.ரத்நாயக்க
தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து 5 வருடங்களின் பின்னர் மீண்டும் வடக்கில் தீவிரவாதத்தினை உருவாக்கும் நோக்கில் பலரும் முயற்சிக்கின்றனர். ஆயினும் பொது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவொரு சாத்தியமும் வடக்கில் இடம்பெறாது என்றும் கூறினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச சமூகமானது இலங்கையில் தனக்கு சார்பான ஓர் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. 30 வருட கால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கில் பாரிய மாற்றங்களும் மக்களிடையே சிறந்த ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் சர்வதேசத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
அதே போல இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றும் இறுதி கட்டயுத்தத்தின் போது பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச் சாட்டுககள் தொடர்பில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையிலோ அல்லது மீண்டும் நாட்டில் போர் சூழலினை ஏற்படுத்தும் முயற்சியில் சர்வதேசம் செயற்படுமாயின் அதற்கேற்ப ஜெனீவா தீர்மானம் எவ்வாறாக அமைந்தாலும் நாம் எமது கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம். வடக்கிலிருந்து இனி ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது.
யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து இராணுவத்தினர் அதிகமானளவில் குறைக்கப்பட்டுள்ளனர் எனினும் முற்றும் முழுதுமாக வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்க முடியாது. இராணுவத்தை வெளியேற்றினால் மீண்டும் ஒரு இனவாத போராட்டம் உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் யுத்தத்தின் பின் மக்கள் இன்று சுமூகமாக வாழ்க்கையை வாழ்கின்றனர். நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சிங்கள மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
எனினும் மீண்டும் சிங்கள தமிழ் மக்களிடையே மோதலை உருவாக்கும் சர்வதேச அமைப்புகளின் தலையீடுகளையோ அல்லது இலங்கைக்குள்ளே ஏற்படுத்தும் பிரிவினை வாதத்தினையோ தடுப்பதில் அரசாங்கத்துடன் இணைந்து இராணுவத்தினர் பாரிய சேவையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் மீண்டும் யுத்தத்தினை ஏற்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம்.
அதே போல வடக்கில் இருக்கும் தமிழ் மக்கள் இராணுவத்தினருடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். வடக்கில் அபிவிருத்தியும் சமூக ஒற்றுமையும் மேலோங்கி காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து முன்னெடுத்து இலங்கையில் சமாதானமும் ஒற்றுமையும் மேலும் வளர்வதற்கு நாம் செயற்படுவோம்.
இன்று இராணுவத்தில் அதிகமான தமிழ் இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பு செயற்பாடுகளை வளர்க்கும் நோக்கில் இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை சீர் குலைக்கும் வகையில் பொய்பிரசாரங்களையும் பொய் வீடியோக்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர். இதன் மூலம் உண்மை நிலை மறைந்து விடப்போவதில்லை.
நாம் வடக்கு தெற்கு என்று அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply