ஐ. ம. சு. முவின் பெருவெற்றியை அமைதியுடன் கொண்டாடுங்கள் : டளஸ் அலஹப்பெரும
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஐ. ம. சு. மு. பெரு வெற்றியீட்டுவது உறுதியாகியுள்ளதால் 30 ஆம் திகதி தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறும் தோல்வியடைந்தவர்களை அவமதிக்காது செயற்படுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அலஹப்பெரும நேற்று ஐ. ம. சு. மு. வேட்பாளர்களிடமும் ஆதரவாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் பிரசார பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மதித்து சட்டத்திற்குட்பட்டு செயற்படுமாறும் அவர் கோரினார். ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் :-
57 தேர்தல் தொகுதியில் 51 தொகுதிகளில் எதுவித சந்தேகமுமின்றி ஐ. ம. சு. மு. வெற்றியீட்டும். 3 தொகுதிகளில் போட்டி உள்ள அதேவேளை 3 தொகுதிகளை வெல்வது கடினம் என இறுதியாக நடத்திய கணிப்பீட்டின்படி உறுதியாகியுள்ளது.
ஐ. ம. சு. மு. பெரு வெற்றியடையும் நிலையில் தேர்தலுக்கு மறுநாளான 30 ஆம் திகதி முதல் அமைதியாக தேர்தல் வெற்றியை கொண்டாடுவதோடு தோல்வியடைந்தவர்களை மதித்து அவர்களையும் தேர்தல் வெற்றியின் பங்காளர்களாக்குமாறு கோருகிறேன்.
எமது தேர்தல் பிரசார பணிகள் பெப்ரவரி 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடம் (26) நிறைவடைகிறது. தேர்தல் சட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் ஜனாதிபதி முன்னின்று செயற்பட்டார். அது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதோடு நீதியான தேர்தலுக்கு பாடுபடும் தேர்தல் ஆணையாளருக்கும் எமது நன்றியை தெரிவிக்கிறோம்.
பொலிஸார் தமது கடமையை செய்து தேர்தல் வன்முறைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தது குறித்து பொலிஸாருக்கும் நன்றி கூறுகிறோம். சிறந்த தேர்தலுக்கு பங்களித்த கட்சிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.
ஐ. ம. சு. மு. சட்டபூர்வமான தேர்தல் பிரசாரத்தை பூர்த்தி செய்துள்ளது. எனவே தேர்தல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயற்படுமாறு ஆதரவாளர்களையும் வேட்பாளர்களையும் கோருகிறோம் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சிரேஷ்ட அமைச்சர் டி. யு. குணசேகர அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த், பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply