மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் யார், யாருக்கு எந்த பதவி?

மத்தியில் புதிய ஆட்சி விரைவில் பொறுப்பேற்கவுள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் யார், யாருக்கு எந்த பதவி? என்பது தொடர்பான யூகங்கள் இப்போதே வெளியாகத் தொடங்கி விட்டன. பா.ஜ.க.வின் மிக மூத்த தலைவரான அத்வானிக்கு பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளது என்று முன்னர் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த பதவியின் மூலம் அவருக்கு ஆட்சியில் நேரடி தொடர்பு இருக்க முடியாது என்பதால், வேறு ஏதாவது ‘சக்தி வாய்ந்த’ பதவி வழங்க முடியுமா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறையும், அருண் ஜெட்லிக்கு நிதி மந்திரி பதவியும் வழங்கப்படலாம் என்று அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருதுகின்றன. 15-வது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக திறம்பட பணியாற்றிய சுஷ்மா சுவராஜுக்கு சுகாதாரம் அல்லது மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது என கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றியடைய காரணமாக இருந்த லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அனேகமாக ரெயில்வே இலாகா ஒதுக்கப்படலாம் என்று அவரது கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும், கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடும் ரெயில்வே துறை அவரிடம் ஒப்படைக்கப்படுமா? அல்லது, உள்கட்டமைப்பு, இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்படுமா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

இவர்களைத் தவிர ரவிசங்கர் பிரசாத், அனந்த் குமார், கோபிநாத் முண்டே, பியுஷ் கோயல், ராஜீவ் ருடி, ரமேஷ் பய்ஸ், வித்யாசாகர் ராவ், ஹர்ஷ்வர்தன், கிரிட் சோமைய்யா, வருண் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களில் சிலரும் மத்திய மந்திரி நாற்காலியை அலங்கரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மோடிக்கு நெருக்கமானவரும், நம்பிக்கைக்குரியவருமான அமித் ஷா, மத்திய மந்திரிசபையில் பங்கேற்க மாட்டார். மாறாக, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கும் குழுவில் அவர் பிரதான அங்கம் வகிப்பார் என்று தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply