சீனப்படைகள் அத்துமீறல்: இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு
காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமர் என்ற பகுதி இந்தியா – சீனா எல்லையில் உள்ளது. இந்த பகுதியை ஆக்கிரமித்து தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என சீனா கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி அத்துமீறல் செய்து வருகிறது. கடந்த 2012–ம் ஆண்டு சுமர் பகுதிக்குள் சீனாவின் மக்கள் போர்ப்படை ராணுவம் கடும் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது. அவர்களுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தி பின் வாங்க செய்தனர். இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சுமர் பகுதி மீது குறி வைத்து சீன ராணுவம் ஊடுருவத் தொடங்கியது. கடந்த 10–ந்தேதியன்று சுமார் ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் லடாக் பிராந்தியத்தின் உள் பகுதிக்குள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி உள்ளே வந்து விட்டனர். அவர்கள் இதுவரை திரும்பிச் செல்லவில்லை.
சீன வீரர்கள் ஊடுருவியுள்ள இடம் மிகப்பெரிய மலைப்பாங்கான இடமாகும் கடல் மட்டத்தில் இருந்து அந்த பகுதி 14,500 அடி உயரத்தில் உள்ளது. அங்கு 15 ஆர்பாயிண்ட், 30 ஆர் பாயிண்ட், பாயிண்ட் 4912, பாயிண்ட் 4991 என்று பல பகுதிகள் உள்ளன.
இந்த இடங்களை குறி வைத்து சீனப் படைகள் 10–ந்தேதி ஊடுருவின. மெல்ல, மெல்ல ஒவ்வொரு பாயிண்ட்களில் சீனா முன்னேறி கூடாரம் அமைத்தது. அந்த வகையில் 8 இடங்களில் சீன வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.
கடந்த 20 நாட்களாக சுமர் பகுதியில் உள்ள சீன வீரர்கள், தங்கள் பகுதியில் இருந்து லடாக் பிராந்தியத்துக்குள் மிக எளிதாக வரும் வகையில் சாலைகள் அமைத்து வருகிறார்கள். தற்போது அவர்கள் பாயிண்ட் 4912 வரை வந்து செல்ல சாலை அமைத்து விட்டனர்.
இந்த பணிகளில் ஈடுபடும் சீன ராணுவ வீரர்களுக்கு சீன விமானப்படை ஹெலிகாப்டர்களில் வந்து உணவு கொடுத்து விட்டுச் செல்கிறது. இந்திய ராணுவம் கடந்த 2 வாரங்களாக பல வகைகளில் எச்சரிக்கை விடுத்த போதிலும் சீன ராணுவம் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. பொருட்படுத்தவும் இல்லை.
இந்த நிலையில் சீன ராணுவ வீரர்கள் அடுத்தக் கட்டமாக பாயிண்ட் 4991 பகுதியை தங்களுடன் சேர்க்கும் வகையில் முன்னேற தொடங்கியுள்ளனர். பாயிண்ட் 4991 வரை சாலை அமைக்கும் பணியையும் தொடங்க திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இது இந்திய ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏனெனில் பாயிண்ட் 4991–ல் சீன ராணுவம் நிலை கொண்டு விட்டால் அது இந்தியாவுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக மாறி விடும். பாயிண்ட் 4991ல் இருந்து பார்த்தால் சுமர் பகுதியை மட்டுமின்றி லடாக் பிராந்தியத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை சீனாவால் முழுமையாக கண்காணிக்க முடியும்.
எனவே பாயிண்ட் 4991 பகுதிக்கு சீனா அத்துமீறி வருவதை தடுக்க இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவம், அந்த பகுதியில் கூடுதலாக வீரர்களை குவித்து வருகிறது.
இந்திய விமானப்படையின் ஒரு பிரிவு சுமர் பகுதிக்கு விரைந்துள்ளது. இது தவிர கூடுதல் ஆயுதங்களுடன் சுமார் 100 டிரக்குகளில் வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். சுமர் பகுதி இமாச்சல பிரதேச எல்லை அருகே உள்ளதால் இமாச்சலபிரதேச மாநிலத்தில் இருந்தும் எல்லை நோக்கி படைகள் நகர்த்தப்பட்டுள்ளன.
இந்தியா அதிக ராணுவ வீரர்களை குவிப்பதை கண்ட சீனாவும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சுமர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
15 ஆர் பாயிண்ட், 30 ஆர் பாயிண்ட் பகுதிகளில் இருந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நேற்று சீனா குறைத்தது. ஆனால் அதற்கு பதில் பாயிண்ட் 4991 நோக்கி அதிக வீரர்களை சீனா அனுப்பி வருகிறது. எனவே சீனா அங்கிருந்து பின் வாங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சில பாயிண்ட்களில் யார் முதலில் பின் வாங்குவது என்று இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி உள்ளனர். இந்த நிலையில் பிராந்திய போருக்கு தயாராகுங்கள் என்று சீன அதிபர் நேற்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் சுகா இன்று பூடான் செல்ல திட்டமிட்டிருந்தார். சீன அதிபரின் அறிவிப்பு மற்றும் சீன வீரர்களின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பை கண்ட தளபதி சுகா தன் பூடான் பயணத்தை ரத்து செய்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து சீனா ராணுவத்தின் ஆக்கிரமிப்பு பற்றி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
லடாக் பிராந்தியத்தில் சீனா மேற்கொண்டுள்ள ஊடுருவல் இந்தியாவுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சீனா ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply