ஐ.நாவின் பசுமை நிதியத்திற்கு 1 பில்லியன் டாலர் வழங்கிய பிரெஞ்சு அதிபர்
வளர்ந்துவரும் நாடுகளில் தோன்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்புதான் பசுமை காலநிலை நிதியமாகும்.இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் கடந்த ஆண்டு தென் கொரியாவில் உள்ள சோங்டோ நகரில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது வளம் மிக்க நாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று ஏழை நாடுகளில் தோன்றும் காலநிலை அபாயத்திலிருந்து அவற்றை பாதுகாக்கவும், அந்நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளை பசுமை நிலை கொண்டவையாக மாற்றவும் உதவி வருகின்றது.
டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நாவின் வானிலை மாநாட்டை முன்னிட்டு இந்த பசுமை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போது வரும் 2020க்குள் இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலரை சேமிப்பு நிதியாக கொண்டுவர வளர்ந்த நாடுகள் ஒரு அரசியல் உறுதிமொழியை மேற்கொண்டன.
இதுவரை இந்த அமைப்பின் சேமிப்பாக 55 மில்லியன் டாலர்களை கணக்கீடுகள் காட்ட ஜெர்மனி மட்டுமே கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பங்களிப்பாக 1 பில்லியன் டாலர்களை அளிப்பதாக முன்வந்துள்ளது. எனவே யுஎன்எப்சிசிசி தலைவரான கிறிஸ்டியானா பிக்யுரெஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 பில்லியன் டாலர் ஆரம்ப மூலதனத்தை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் பங்குபெற்ற பிரான்ஸ் அதிபர் பிரான்க்காய்ஸ் ஹாலன்டே இந்த அமைப்பிற்கு 1 பில்லியன் டாலர்கள் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி உதவியானது அடுத்த நான்கு ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர தென் கொரிய அதிபர் பார்க் ஜியுன் ஹை 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply