சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் உடலை கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பக்ரைன் மற்றும் கத்தார் கடல் எல்லைப் பகுதியில் நடந்த துயர சம்பவத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 21-ந் தேதி நடந்த அந்த சம்பவத்தில், பக்ரைனில் வசித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் கார்த்திக்கேயன் என்ற மீனவர், வேறு 3 மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கத்தார் கடலோர பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மற்ற 3 மீனவர்களான அதே மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன், ராஜூ, சமயமுத்து ஆகியோர் கத்தார் கடலோர காவற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பக்ரைனில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்த 4 மீனவர்களும் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, வழிவிலகி கத்தார் நாட்டு கடற்பகுதிக்குள் சென்றுவிட்டதாக தெரியவருகிறது. அதனால்தான் கத்தார் கடலோர காவற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியும், 3 மீனவர்களை கைது செய்தும் உள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள 3 மீனவர்களும் கத்தாரில் உள்ள டோகா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் இறந்து போன மீனவரின் உடலும் கத்தார் அரசின் வசம் உள்ளது என்று தெரிகிறது. இவர்கள் தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக சம்பாதிப்பதற்காக பக்ரைனுக்கு சென்றவர்கள். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்தினர், மிகுந்த பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவரது உடலைப் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால், அவர்களின் குடும்பத்தினர் வேறு வருமானம் இல்லாமல் மிகுந்த நிதிப் பற்றாக்குறை மற்றும் மன துயரத்துக்கு ஆளாவார்கள். ஏனென்றால், அவர்கள் மட்டும்தான் அவர்களது குடும்பத்துக்காக சம்பாதிக்கின்றனர். வேறு வருமானத்துக்கு வழியில்லை.
எனவே நீங்கள் உடனே கத்தார் மற்றும் பக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு உத்தரவிட்டு, இறந்துபோன கார்த்திக்கேயனின் உடலை இந்தியாவுக்கு அனுப்பவும், கைதான மற்ற மீனவர்களை உடனே விடுதலை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கார்த்திக்கேயன் பணியாற்றிய நிறுவனத்தின் மூலம் அவருக்கு சேர வேண்டிய பாக்கித்தொகை காலதாமதமின்றி உடனே அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கும் வகையில் செயல்பட பக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நீங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply