வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு கூட முடியா விட்டால் அரசின் பங்காளியாக இருப்பதில் அர்த்தமில்லை ; சபையில் இராதாகிருஷ்ணன் ஆவேசம்
மலையகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கென நிர்மாணிப்பதற்கான வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டில் 2,000 வீடுகளும் 2014 ஆம் ஆண்டில் 5,000 வீடுகளும் நிர்மாணிக்கப்படவிருந்த போதிலும் அத்திட்டம் கால்நடை வள கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளரது கடிதத்தின் மூலம் நிறுத்தப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் அத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அவருக்கு இருக்கும் அதிகாரம் தான் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
நாம் மலையகத்தின் தோட்டப் புறங்களிலிருந்தே இந்த பாராளுமன்றத்துக்கு வந்துள்ளோம். அரசாங்கத்திலும் பங்காளியாக இருக்கிறோம். அப்படியிருந்தும் எமது மக்களுக்காக வீடுகளைக்கூட பெற்றுக்கொடுக்க முடியா விட்டால் நாம் இந்த சபையில் இருப்பதிலோ அரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதிலோ எந்த அர்த்தமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிர்மாணத் தொழில் அபிவிருத்தி சட்ட மூலம் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இராதாகிருஷ்ணன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்;
மலையகத்திலே வாழும் எமது மக்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பொருட்டு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் 2013 ஆம் ஆண்டில் 2,000 வீடுகளும் 2014 ஆம் ஆண்டில் 5,000 வீடுகளும் நிர்மாணிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அத்திட்டம் கைவிடப்படுவதற்கு கால்நடை வள முகாமை அபிவிருத்தி அமைச்சே காரணமாகும். அவ்வமைச்சின் செயலாளரினால் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் காரணமாகவே இவ்வீடமைப்புத் திட்டம் தடுக்கப்பட்டது. அப்படி என்றால் அவருக்கு இருக்கும் அதிகாரம் என்ன?
இங்கு நான் அமைச்சரைக் குறை கூறவில்லை. இருந்த போதும் அமைச்சொன்றின் செயலாளரால் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தை வைத்து இத்திட்டத்தை நிறுத்தியமையைத்தான் இங்கு கூறுகிறேன்.
நாம் தோட்டப்புறத்திலிருந்தே பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறோம். அத்துடன் ஆளும் கட்சியின் பங்காளியாகவும் இருக்கிறோம். நாம் அரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதன் காரணத்தால் சில விடயங்களை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
நாம் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தும் எமது மக்களுக்காக குடியிருப்புகளைக் கூட பெற்றுக்கொடுக்க முடியா விட்டால் நாம் இந்த சபையில் இருப்பதிலோ அல்லது அரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதிலோ எந்தவித பயனும் கிடையாது. இதனை என்னால் எந்த இடத்திலும் கூற முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply