மஹிந்த ராஜபக் ஷவுக்கும் மங்களவிற்குமிடையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி இரவு மொரட்டுவை பகுதியில் வைத்து இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த சந்திப்பின்போது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தற்போதுள்ள அமைச்சுக்களில் சிலவற்றை மாற்றியமைத்தல் மற்றும் மங்களவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.அத்தகவல்கள் மூலம் மேலும் தெரிய வருவதாவது,
ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகின. இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதிக்கும் மங்களவிற்குமிடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மூன்றாம் திகதி இரவே இந்த இரகசிய சந்திப்பு ஜனாதிபதிக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பையடுத்து மங்களசமரவீர சிங்கப்பூருக்கு பயணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சிங்கப்பூர் சென்றுள்ள மங்கள சமரவீர நாடு திரும்பியதும் ஜனாதிபதியுடன் மற்றுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் விரைவில் அவர்களது பெயர் விபரங்களையும் வெளியிடுவோம் எனவும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் அண்மையில் பகிரங்கமாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதி தலைவர் பதவி வழங்கப்பட்டதையடுத்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைவதற்காக வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மங்கள சமரவீரவை அரசாங்கத்துடன் இணைய வேண்டாம் என கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply