நாட்டையும் மக்களையும் சரியான பாதையில் வழி நடத்துவதே எனது முதற்கடமை
எதிர்க்கட்சியின் பொறுப்பினை மிகச்சரியாக செய்து நாட்டையும் மக்களையும் சரியான பாதையில் வழி நடத்துவதே எனது முதற்கடமை. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் அடுத்த பொது தேர்தலில் ஆட்சியமைப்போம் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஊழல் மற்றும் தேசத்துரோகிகளை காப்பாற்றி நாட்டை சீரழிக்கும் செயலை எதிர்க்கட்சி செய்யாது. நாட்டில் சட்டத்திற்கும் நீதிக்கும் முதலிடமெனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் தனது கடமைப்பொறுப்பினை நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார். நேற்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வு சர்வ மதங்களின் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
அரசியல் தலைமைகள் பங்கேற்பு
இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுமான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஜி.எல்.பீரிஸ் ஏ.எச்.எம். அஸ்வர் சீ.பி. ரத்நாயக்க, மேர்வின் சில்வா, மகிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிமல் சிறிபால டி சில்வா
இதில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியாக நாம் பொறுப்பேற்றுள்ளோம். எமக்கு இருக்கும் பொறுப்பு மிகவும் கடினமானதும் முக்கியமானதுமாகும். அரசாங்கம் செய்யும் நல்ல வேலைத்திட்டங்களை அதிகரிக்கும் நாட்டிற்கு எதிராக செயற்படும் தீய செயற்பாடுகளை கண்டித்தும் நாம் செயற்பட வேண்டும். நாட்டில் நடுவர் பொறுப்பு எமக்கு மட்டுமே உள்ளது. எனவே அந்த பொறுப்பினை மிக சரியாக செய்து அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை அவதானித்து மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மைகள் ஏற்படுமாயின் அதனை ஆதரித்து அதேபோல் நாட்டிற்கு ஒத்து வராத செயற்திட்டங்களுக்கு எதிர்ப்பினை தெரிவித்தும் செயற்படுவோம்.
மேலும் எமது செயற்பாடுகளில் பாராட்டும் விமர்சனமும் என இரண்டிற்கும் தயாராகியுள்ளோம். எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாம் மன தைரியத்துடன் தயாராகி விட்டோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை மீட்டெடுப்போம்
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சி வேலைத்திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலர் வீழ்ந்துள்ளனர். எனவே எமது கட்சியினை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளமை எமக்கு மிகப்பெரிய பலமாகும்.
அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த பொது தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் ஆட்சியினை கைப்பற்றுவோம். ஐக்கிய தேசிய கட்சியின் சதி வேலைத்திட்டங்களில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதும் நாட்டில் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை உருவாக்குவோம்.
சட்டத்திற்கே முதலிடம்
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் கட்சிக்கும் செய்த சேவையினை எம்மால் மறக்க முடியாது. எப்போதும் அவருக்கான மரியாதையினை நாம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். எனினும் இப்போது ஊழல் தேசத்துரோக செயற்பாடுகள் என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நல்ல நபர்களை அவமதிக்கின்றனர். நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்பட வேண்டும். நாட்டிற்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை காப்பாற்றும் செயலை எதிர்க்கட்சி செய்யாது. நாம் சட்டத்திற்கும் நீதிக்கும் சுயாதீன செயற்பாடுகளுக்குமே முன்னுரிமை வழங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply