ஐ.எஸ்.ஸிடமிருந்து திக்ரித்தை மீட்க  இராக் ராணுவம் மும்முரத் தாக்குதல்

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள இராக்கின் திக்ரித் நகரை மீட்பதற்காக, அந்த நாட்டு ராணுவத்தினர் மும்முரமான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். சுமார் 30,000 ராணுவத்தினரால் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல், இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கான முதல் கட்டம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராணுவம், சிறப்புக் காவல் படை, தன்னார்வப் படை, பழங்குடியினப் படை ஆகியவை திக்ரித்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் பங்கேற்கின்றன.

கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரிய தாக்குதல் இது.

இந்தப் போரில் எங்களுக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். எனினும் அந்த வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடாது என்றார் அவர்.

முன்னாள் அதிபர் சதாம் உசைனின் சொந்த ஊரான திக்ரித்தில், பயங்கரவாதிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் தரைப்படையினருக்கு பக்கபலமாக போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.

எனினும், தங்கள் நாட்டு விமானங்கள் அந்தப் பகுதியில் தாக்குதல் தொடுக்கவில்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். அவை ஈரான் நாட்டு விமானங்களா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான இந்த நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக ஈரான் ராணுவத்தின் ரகசியத் தாக்குதல் படையின் தலைவர் காசிம் சுலைமானி அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply