தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கற்பழிப்பு குற்வாளியின் பேட்டியை ஒளிபரப்ப தடை: டெல்லி போலீஸ் கோர்ட்டில் வழக்கு

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் இந்த சம்பவத்துக்கு அதிர்ச்சியை வெளியிட்டன.இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ்சிங். இவன் தான் பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறான். லண்டனைச் சேர்ந்த பெண் சினிமா தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கிறார். இதற்காக அவர் லண்டன் பி.பி.சி. குழுவினருடன் டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கற்பழிப்பு குற்றவாளி முகேஷ் சிங்கை சந்தித்து பேட்டி எடுத்து உள்ளனர்.

அப்போது முகேஷ் சிங் பெண்கள் பற்றி திமிராக கருத்து தெரிவித்து உள்ளான். அவன் தெரிவித்த கருத்துக்கள் இணைய தளங்களிலும், சில ஊடகங்களிலும் வெளியானது.

அதில் அவன், நாங்கள் (குற்றவாளிகள்) பாலியல் பலாத்கார கும்பலாக மாறுவதற்கு இரவு நேரத்தில் வெளியே வந்த பெண்தான் காரணம். இதற்கு அந்த பெண் தன்னையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும். அந்தப் பெண்ணும், அவரது நண்பரும் திருப்பி தாக்காமல் இருந்தால் நாங்கள் அவர்களை தாக்கி இருக்க மாட்டோம். இது ஒரு விபத்தாகும். நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்த போது அமைதியாக அவர் அனுமதி அளித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் தாக்கப்பட்டு இருக்க மாட்டாள்’’ என்று கூறியிருக்கிறான்.

மேலும் பெண்கள் பற்றி குறிப்பிடுகையில் எந்த பெண்ணும் இரவு நேரத்தில் சுற்ற மாட்டாள். ‘‘ஆணும் பெண்ணும் சமம் அல்ல. பெண் வீட்டில் சமையல் வேலை மட்டும் தான் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் டிஸ்கோ, பார் என்று செல்லக் கூடாது. 20 சதவீதம் பெண்கள் நல்லவர்கள்’’ என்றும் முகேஷ் சிங் தெரிவித்துள்ளான்.

குற்றவாளியின் இந்த கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்பு மிக்க சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதி அளித்தது ஏன் என்ற சர்ச்சை எழுந்தது.

அவனது பேட்டி வெளியான உடனே உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் அலோக்குமார் வர்மாவை தொடர்பு கொண்டு பேசி தனது அதிருப்தியை வெளியிட்டார். இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றவாளியின் பேட்டி தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யார் பெயரையும் குறிப்பிடாமல் திகார் சிறைத்துறை நிர்வாகம் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இலாகா பூர்வ விசாரணையையும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். எந்த வகையில் பேட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டது, அனுமதி கொடுத்த அதிகாரிகள் யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவனது பேட்டியில் பெண்களை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெற்று இருப்பதால் அதை செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே உலக மகளிர் தினத்தையொட்டி வருகிற 8–ந்தேதி குற்றவாளியின் பேட்டி அடங்கிய ஆவணப் படத்தை ஒளிபரப்ப லண்டன் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் முன் கூட்டியே குற்றவாளியின் கருத்துக்கள் வெளியாகி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. வருகிற 8–ந்தேதி இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாவதை தடுக்கவும் டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

டெல்லி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஆவணப்படத்துக்கு தடை விதிக்க கோர முடிவு செய்துள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்சி கூறினார்.

ஒரு கொடூர குற்றம் புரிந்தவனிடம் சட்டத்துக்கு புறம்பாக பேட்டி எடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி விசாரணை நடத்துவோம். பேட்டியை ஒளிபரப்ப தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply