இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல்: ஆட்சியைப் பிடிப்பது யார்? ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது
650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து ஆளும் கட்சி முன்னிலை வகித்து வந்திருந்தாலும், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு சதவீத ஆதரவுதான் வித்தியாசம். இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடி வாக்காளர்கள் ஓட்டு போடும் உரிமையைப் பெற்றிருந்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.30 மணி) ஓட்டுப்பதிவு தொடங்கியது.
காலை முதலே வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளை நோக்கி திரண்டு வரத்தொடங்கினர். வரிசையில் நின்று அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றினர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணி) ஓட்டுப்பதிவு முடிந்தது. 10 மணிவரை வரிசையில் நின்றவர்களுக்கு வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் முறையாக ஆன்லைன் வழியாக வாக்கு அளிக்கவும் வாக்காளர்களுக்கு வசதி செய்து தரப்பட்டிருந்தது. பிரதமர் டேவிட் கேமரூன், தொழிலாளர் கட்சி தலைவர் எட் மிலிபான்ட், கிரீன்ஸ் கட்சி தலைவர் நாட்டாலி பென்னட் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 326 இடங்களை கைப்பற்றும் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இன்று (வெள்ளிக்கிழமை) முடிவுகள் தெரியும்.
ஆட்சியைப் பிடிக்கப்போவது ஆளும் கன்சர்வேடிவ் கட்சியா, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியா என்ற கேள்வி எழுந்தாலும், பெரும்பாலும் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply