மதுவிலக்கை வலியுறுத்தி செப்டம்பர் 5-ந் தேதி மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் தாயகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது அவர், இன்றைய மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் நலனை காக்க கூட்டு இயக்க போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் ம.தி.மு.க. அதில் இடம் பெற வேண்டும் என்று முன் வைத்த கோரிக்கை குறித்து உயர்நிலை கூட்டத்தில் விவாதித்தோம். கூட்டு இயக்கத்தில் ம.தி.மு.க. பங்கு பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டு இயக்கத்தில் யார்? யார்? வருவார்கள் என்பது எனக்கு தெரியாது. இதை ஜி.ராமகிருஷ்ணன் தான் முடிவு செய்வார். கூட்டணி பற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்ல. இந்த கூட்டு இயக்கம் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை மக்களிடத்தில் வெளிப்படுத்தவதற்காக தான்.

தமிழகத்தில் சின்னஞ்சிறு பாலகனை மது அருந்த வைத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பாழ்படுத்தும் குற்றத்துக்கு காரணமான அ.தி.மு.க. அரசின் மீது யார் வழக்கு தொடுப்பது? முழுமையான மதுவிலக்கை இலக்காக கொண்டு தீவிர நடைபயணம் மேற்கொண்டேன்.

கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் கோவை, சென்னை, திருச்சியில் மதுவிலக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயங்களை ம.தி.மு.க. நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்ற மதுவிலக்கு மாரத்தான் போட்டியை செப்டம்பர் 5-ந் தேதி மதுரை புறநகர் மாவட்டத்தில் நடத்துவது நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2015 நவம்பரிலேயே தொடங்குவதையொட்டி, செப்டம்பர் 15-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா-திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடத்த இந்த கூட்டம் தீர்மானிக்கிறது. இந்த மாநாட்டில் திராவிட இயக்க நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியை திறப்பது என்றும் உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

* வளரும் தலைமுறையினரான மாணவர்களையும், இளைஞர்களையும் திராவிட இயக்க லட்சியங்களில் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை ஏற்படுத்த ஆகஸ்டு 8, 9-ந் தேதிகளில் ஈரோட்டிலும், 23, 24-ந் தேதிகளில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடத்துவது என்றும், மூன்றாம் பட்டறை செப்டம்பர் 5, 6-ந் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

* 20 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டு படுகொலை செய்த கோரச்சம்பவத்தில், அ.தி.மு.க. அரசு, குற்றவாளியான ஆந்திர அரசுக்கு அனைத்து வழிகளிலும் உதவிக்கொண்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் சார்பில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply