கிழக்கு மாகாண முதல்வர் – கடற்படை அதிகாரி மோதல்: விளக்கம் கேட்கிறார் ரணில்
இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பாக இருதரப்பு விளக்கங்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.திருகோணமலை மாவட்டம் சம்பூர் மகா வித்தியாலயத்தில் கடற்படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், கிழக்கு மாகாண முதல்வருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் கசப்பான சர்ச்சை ஏற்பட்டது.
இது, ஊடகங்களில் காணொளியாக வெளியாகியுள்ள நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிகழ்வில் மாகாண முதலமைச்சராகிய தனக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், அதற்கு பொறுப்பாகவிருந்த கடற்படை அதிகாரியை அவமதிக்கும் வகையில் கடுமையான சொற் பிரயோகங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.
“என்னை நிறுத்துவதற்கு நீ யார் ? முட்டாளே ஒழுங்குமுறை தெரியாவிட்டால் வெளியே போ. என்னைப் பற்றி தெரியாவிட்டால் வாயை மூடு” உட்பட கடும் வார்த்தைகளால் முதலமைச்சர் கடிந்து கொண்ட காணொளி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடமும் கடற்படை தளபதியிடமும் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் கூறுகின்றது
இருதரப்பு அறிக்கைகளும் கிடைத்த பின்னர் இது தொடர்பான அறிக்கையொன்றை பிரதமர் ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்றும் இது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி எடுப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு இரு தரப்பையும் பிரதமர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் இந்த அறிக்கை முன் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply