அமெரிக்காவில் ரகசியமாக வாழ்ந்து வரும் வட கொரிய அதிபரின் சித்தி!

kim shangவட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவின் பரம எதிரியாகக் கருதப்படுபவர்.ஆனால் அவரது சொந்த சித்தி, அமெரிக்காவில் வெளியுலகுக்குத் தெரியாமல் ரகசியமாக வாழ்ந்து வரும் தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் வெளியான செய்தி: கிம் ஜோங்-உன்னின் தாய் கோ யோங்-ஹுய்யின் சகோதரியான கோ யங்-சக், தற்போது அமெரிக்காவில் புதிய பெயருடன் வசித்து வருகிறார்.
நியூயார்க் நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ள தனது இல்லத்தில், கணவர் மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வரும் அவர் துணி சலவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். வட கொரியாவில் கம்யூனிஸ்ட் அரசுக்கு மிக நெருக்கமாக இருந்த கோ யங்-சக், ஸ்விட்சர்லாந்தில் படித்து வந்த கிம் ஜோங்-உன் மற்றும் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கோ யங்-சக்கும், அவரது குடும்பத்தினரும் கடந்த 1998-ஆம் ஆண்டு தஞ்சமடைந்தனர்.
பல மாதங்கள் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டார்.
நியூயார்க் அருகே அவர் வீடு வாங்குவதற்கு சி.ஐ.ஏ. உளவு அமைப்பு நிதியுதவி அளித்தது.
கோ யங்-சக் எதற்காக வட கொரியாவுக்குச் செல்லாமல் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. அவர் கவனித்துக் கொண்டிருந்த குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், இனி வட கொரியாவில் தங்களுக்கு மரியாதை இருக்காது என்று கோ யங்-சக் கருதியிருக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர். வட கொரிய அரசுடன் அவருக்கு இருந்த ஒரே தொடர்பான கிம் ஜோங்-உன்னின் தாயார் கோ யோங்-ஹுய்க்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டதாகவும், அவரது மரணத்துக்குப் பின் வட கொரிய அரசு தங்களை எவ்வாறு நடத்தும் என்பது குறித்த அச்சம் காரணமாக கோ யங்-சக் அமெரிக்காவில் தஞ்சமடைந்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.
இவ்வாறு “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
“27 வயதில் பதவியேற்றார் கிம்’
“வட கொரிய அதிபராக கிம் ஜோங்-உன் பதவியேற்றபோது அவருக்கு 27 வயதே ஆகியிருந்தது’ என்று கோ யங்-சக் தெரிவித்தார்.
அமெரிக்காவின் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். பேட்டியின்போது அதிபர் கிம் ஜோங்-உன்னின் சிறுபிராயம் குறித்து அவர் அளித்த சுவாரஸ்யமான தகவல்கள்:
சிறு வயதில் கிம் ஜோங்-உன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாவிட்டாலும், முன் கோபமும், சகிப்புத் தன்மை இல்லாததும் அவரது அடிப்படை குணமாக இருந்தது.
எல்லோரும் நினைப்பது போல் கிம் ஜோங்-உன் 1982 அல்லது 1983-ஆம் ஆண்டு பிறக்கவில்லை. 1984-ஆம் ஆண்டுதான் பிறந்தார். அதாவது அவர் அதிபர் பதவி ஏற்றபோது அவருக்கு வயது 27. கூடைப்பந்து விளையாட்டில் கிம் ஜோங்-உன்னுக்கு இருந்த ஆர்வம் நாளடைவில் வெறியாக மாறியது என்றார் கோ யங்-சக்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply