நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் ‘நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட வேண்டும்’ ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து செய்தி
நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:–சுதந்திர தின வாழ்த்து
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்திய மண்ணில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டிட நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில், சிறையில் அடைப்பட்டு, இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றோர், தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து உயிர்த் தியாகம் செய்தோர் என எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை நெஞ்சில் நினைத்துப் போற்றுவதற்கும், அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் உரிய பொன்னாள் இந்தச் சுதந்திரத் திருநாளாகும்.
தாய்நாட்டு சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளைப் போற்றிடும் வகையில் உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது;வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 4,500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது; விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.அயராது பாடுபட வேண்டும்
மேலும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்களை நினைவு கூர்ந்து, அந்த மாமனிதர்கள் நாட்டிற்கு ஆற்றிய தொண்டினை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், தியாகி சுந்தரலிங்கனார் மணிமண்டபம் என பல்வேறு தியாகிகளின் நினைவகங்களை அமைத்து எனது தலைமையிலான அரசு சிறப்பித்து வருவதுடன், தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புதுப்பித்து புனரமைத்து வருகிறது.நம் முன்னோர்கள் போராடிப்பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்து, சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் தாய் திருநாட்டின் வளர்ச்சிக்காக நம் கடமையை உணர்ந்து, அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply