ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் குறித்து மாநில அரசு தொடர்பில்லாத கமி‌ஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்: இளங்கோவன்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர். இதை வற்புறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகங்கள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே கிராம மக்களிடம் சந்தேகம் இருக்கிறது. சசிகலா தரப்பினர் நடவடிக்கைகளும் சந்தேகத்தை அதிகமாக்கி இருக்கிறது. எனவே சந்தேகம் தீர்க்கப்படவேண்டும்.

ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற காரணம் தெளிவாக சொல்லப்பட வில்லை. நீர்சத்துகுறைவு, காய்ச்சல் என்று ஆஸ்பத்திரி தரப்பில் முடிவில் கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

சாதாரண காய்ச்சல் என்றால் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை வசதி இருக்கிறது. அப்படி என்றால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? மயங்கிய நிலையில் வந்தது உண்மையா? என்பது தெரிய வேண்டும். இது பற்றிய விவரத்தை யாரும் இன்னும் சொல்லவில்லை.

ஜெயலலிதா வீட்டில் கீழே விழுந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது உண்மை என்றால் அவர் தானாக விழுந்தாரா? அல்லது வேறு காரணம் எதுவும் உண்டா என்பதும் தெளிவாக்கப்படவேண்டும்.

அவரது இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அவர் முன்னதாகவே இறந்து விட்டார். ஆனால் அது தாமதமாக தெரிவிக்கப்பட்டது என்ற கூறுகிறார்கள். இதற்கு காரணம் என்ன?

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ராகுல்காந்தி பார்க்க முடியவில்லை. கவர்னர் பார்க்க முடியவில்லை. அங்கு சென்ற யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் செங்கோட்டையன் மட்டும் பார்த்தேன் என்கிறார். இது உண்மையா என்பது நிரூபிக்கப்படவேண்டும்.

அந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்சுகள் ஜெயலலிதாவிடம் பேசியதாகவும், அப்போது தனது வீட்டுக்கு வரும்படி அவர்களை அழைத்ததாகவும் சொல்லுகிறார்கள். அது உண்மை என்றால் அந்த நர்சுகள் நடந்ததை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்கள் தெரிவித்த கருத்துக்களில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. சிறிய ஆஸ்பத்திரிகளில் கூட அவசரப்பிரிவு வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

ஆனால் உலகிலேயே சிறந்த சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொள்ளும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அவசர சிகிச்சை பிரிவு வார்டில் கேமரா இல்லை என்று லண்டன் டாக்டர் கூறுகிறார். இது ஏற்கும்படி இல்லை. எனவே உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதலே பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு உள்ளன. விரைவில் வீடுதிரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தீடீர் மரணம் அடைந்து விட்டார் என்ற அறிவிப்பு மக்களிடம் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச்செய்து இருக்கிறது. முன்பு மவுனமாக இருந்தவர்கள் கூட இப்போது விசாரணை தேவை என்கிறார்கள்.

எனவே, மாநில அரசு சம்பந்தப்படாத வகையில் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும். அப்போது தான் ஜெயலலிதா மரணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு சரியான விடை கிடைக்கும். ஒரு மாநில முதல்-அமைச்சரின் மரணம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply