இந்திய நிலைகளை அழித்துவிட்டோம் வீடியோ வெளியிட்டது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் நுழைய செய்ய முயற்சி செய்கிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்திய ராணுவம், எல்லையில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தங்க வைத்திருந்த அந்நாட்டு நிலைகளை குறிவைத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது, இதுதொடர்பான வீடியோவையும் மீடியாக்களுக்கு வெளியிட்டது.

இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இந்திய ராணுவ நிலைகளை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோவை வெளியிட்டு உள்ளது. தாட்டா பானி செக்டாரில் இந்திய ராணுவத்திற்கு கொடுத்த பதிலடியில் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என பாகிஸ்தான் கூறிய மறுநாள் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

சுமார் 27 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் இன்று அதிகாலை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

வீடியோவை வெளியிட்டு அவர் விடுத்து உள்ள அறிக்கையில், “எல்லையில் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் அழித்த காட்சிகள்,” என குறிப்பிட்டு உள்ளார்.

இரண்டு வாரங்களில் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மே மாதம் 24-ம் தேதியும் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்து விட்டதாக வீடியோ வெளியிட்டது, ஆனால் அதனை இந்திய ராணுவம் நிராகரித்து விட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply