ஜப்பானில் கோர விபத்து மலையில் விமானம் மோதி 4 பேர் பலி

ஜப்பான் நாட்டில் பனியால் மூடப்பட்டுள்ள வடக்கு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விமானம் விபத்துக்குள்ளானது பற்றி தகவல் அறிந்து 14 மணி நேரத்திற்குப் பின்னர்தான் மீட்புப்படையினர் அங்கு சென்றடைய முடிந்தது. ஏனெனில் சம்பவம் நடந்த இடம் 2 ஆயிரத்து 300 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதி, அதுவும் பனி மூடி இருந்தது என்பதுதான்.

இடிபாடுகளில் நசுங்கிக்கிடந்த 4 பேரை அங்கிருந்து மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்களது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

பலியானவர்கள் 21 முதல் 57 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் குறித்து டோயாமா மாகாணத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “விபத்தில் சிக்கிய 4 பேரில் ஒருவர் போலீசை அவசரமாக அழைத்து, தாங்கள் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். அங்கு சென்றடைந்தபோது விமானி உள்பட 2 பேர் நினைவற்ற நிலையில் கிடந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து நினைவுடன் இருந்தனர். ஆனால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே அனைவரின் உயிரும் பிரிந்து விட்டது என்பது டாக்டர்கள் சொல்லித்தான் தெரிந்தது” என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply