நீட் தேர்வினால் பலியான அனிதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது – ஆயிரக்கணக்கானோர் நேரில் அஞ்சலி

7நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவர்களில் அனிதாவும் ஒருவர். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் இறந்து விட்டார். சிறு வயது முதலே அனிதாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.

தந்தையின் குறைந்த வருமானத்தில் தனியார் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றார். மருத்துவ கட்-ஆப் 196.75 என்பதால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் ‘நீட்’ தேர்வில் அவருக்கு 700-க்கு 86 மார்க் மட்டுமே கிடைத்தது. இதனால் அவரது டாக்டர் கனவு தகர்ந்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியும் ஆசை நிறைவேறாமல் போனது.

டாக்டருக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை என்றாலும், வேளாண் படிப்பு படித்து விவசாயம் செழிக்க பாடுபடுவேன் என்று கூறி மனதை தேற்றி வந்தார். ஆனாலும் உள்மனதில் டாக்டர் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு தரப்பில் அவரது குடும்பத்திற்கு ஏழு லட்ச ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிந்து அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

 

மேலும், அரசியல் கட்சிகளை சேர்ந்த பல தலைவர்களும் நேரில் வந்து மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வி.சி.க. தலைவர் திருமாவளவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், சுமார் நேற்றிரவு 9 மணியளவில் குழுமூருக்கு நேரில் வந்து அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், தி.மு.க. சார்பில் அவரது குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய மாநில அரசுகள், தவறான தகவல்களை தந்து மாணவர்களை ஏமாற்றி விட்டனர். அனிதாவின் மரணம், தற்கொலை என்பதைவிட கொலை என்றே கூறவேண்டும்.
தமிழக அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றிககொள்ளவே டில்லி சென்று வந்துள்ளதாக தெரிகிறது. நீட் தேர்விற்காக சென்று வரவில்லை. மாணவி பலியாவதற்கு காரணமான முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு குறித்து நாளை மறுநாள்(செப்-4) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.

நீட் தேர்வில் விலக்கு கிடைத்திருந்தால் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கும். ஓராண்டிற்கு விலக்கு கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். மாணவி அனிதா குடும்பத்திற்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

அதன் பின்னர், சுமார் 11 மணியளவில் அனைத்து ஈமைச்சடங்குகளும் நிறைவேற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு அனிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செய்தனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply