கர்நாடக உள்துறையின் அனுமதியை தொடர்ந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார்?

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர் இன்று வெளியே வர வாய்ப்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திக்க செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் நேற்று முன் தினம் விண்ணப்பித்தார்.

சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், உள்துறை, சட்ட அமைச்சகத்துக்கு சோமசேகர் கடிதம் அனுப்பினார். மேலும் சசிகலா சென்னை வருவதால் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படுமா? அவருக்கு ஆபத்து உள்ளதா? போதிய பாதுகாப்பு வழங்கப்படுமா போன்ற விஷயங்களில் தடையில்லா சான்று வழங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேற்று தடையில்லா சான்றிதழின் நகலை மின்னஞ்சலில் சிறைத் துறைக்கு அனுப்பி வைத்தார்.

இதே போல கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சசிகலா பரோலில் செல்ல அனுமதி அளித்தார். மாநில உள்துறை செயலர் பசவராஜ், சிறைத்துறையின் விதிமுறையின்படி சசிகலாவுக்கு பரோல் வழங்கலாம் என பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில் சட்ட அமைச்சகம், சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் அவசியமா? ஒரு வாரத்துக்கு மேல் பரோல் விடுப்பில் சென்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். எனவே சசிகலாவுக்கு 5 நாட்கள் வரை பரோல் வழங்கலாம் என சிறைத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சசிகலாவுக்கு பரோல் வழங்குவதற்கு சட்டத்துறை இன்று ஒப்புதல் அளிக்கும். இதைத் தொடர்ந்து இன்று மாலையோ அல்லது சனிக்கிழமையோ அவர் வெளியே வர வாய்ப்பு உள்ளது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply