15 பில்லியன் டாலர் மதிப்பில் தாட் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை சவுதி அரேபியாவுக்கு விற்கிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மே மாதம் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, நவீன ரக ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அதில், தாட் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பும் ஒன்று. இது ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது.

இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு தாட் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்திருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதன்மூலம், 15 பில்லியன் டாலர் மதிப்பிலான 44 தாட் லாஞ்சர்கள், 360 ஏவுகணைகள் மற்றும் ரேடார்களை சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்யப்பட உள்ளதாக பென்டகன் இன்று தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் பிற பிராந்திய நாடுகளின் அச்சுறுத்தலை சமாளித்து வளைகுடா பிராந்தியம் மற்றும் சவுதியின் நீண்ட கால பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கா இந்த ஆயுதங்களை விற்பனை செய்வதாக பென்டகனின் ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை தெரிவித்துள்ளது.

ஏமனில் ஹவுத்தி கிளச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த ஆயுத விற்பனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏமனில் நடத்தப்படும் தாக்குதலானது தீவிரவாதிகளுக்கு எதிராகவும், ஏமன் அரசுக்கு ஆதரவாகவும் நடத்தப்படும் தாக்குதல் என சவுதி கூறினாலும், இதில் கொல்லப்படுவது பெரும்பாலும் பொதுமக்கள்தான் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply