கொலராடோ வால்மார்ட் கடையில் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சமீபகாலமாக பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் நியூயார்க்கில் லாரியை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொலராடோ மாநிலத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கொலராடோ மாநிலம் டென்வரில் உள்ள பிரபல வால்மார்ட் ஸ்டோரில் நேற்று இரவு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்த சமயத்தில் உள்ளே துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறியடித்து கடையை விட்டு வெளியேறினர். கடை ஊழியர்கள் கத்தி கூச்சலிட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதில் தாக்குதல் நடத்திய நபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சம்பவம் நடந்த வால்மார்ட் ஸ்டோர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பொதுமக்களை அப்பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இது திட்டமிட்டு நடந்த தாக்குதலாகத் தெரியவில்லை என காவல்துறை கூறியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply