மாலத்தீவுக்கு ஐ.நா. குழுவை அனுப்ப வேண்டும் :இந்தியா

மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உள்பட அரசியல் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்க அதிபர் அப்துல் யாமீன் மறுத்துவிட்டார். மேலும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து அரசியல் கைதிகள் விடுதலை உத்தரவை மற்ற நீதிபதிகள் ரத்து செய்தனர். மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதை கண்டித்து எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது போன்ற அதிரடி திருப்பங்களால் மாலத்தீவில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்பி அரசியல் தீர்வுக்காக உதவ வேண்டும் என இந்தியாவுக்கு முன்னாள் அதிபர் முகமது நசீத் கோரிக்கை விடுத்துள்ளார். மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இந்தியாவுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இந்திய பெருங்கடலில் சீனா ஏற்கனவே 17 தீவுகளை தன்னகத்தே வைத்துள்ளது. தற்போது 40 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்து மாலத்தீவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ராணுவம், போலீஸ், சுங்கத்துறை மற்றும் குடிபெயர்தல் மூலமாக மாலத்தீவில் நுழைந்துள்ளனர். இது போன்ற காரணங்கள் எதிர் காலத்தில் இந்தியாவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இந்தியா மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்பி அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் இந்தியா மாலத்தீவு விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா தலையிட்டால் அதை எதிர்க்க சீனா தயாராகி வருகிறது. எனவே இந்த வி‌ஷயத்தை இந்தியா மிக உன்னிப்பாக கவனித்து ராஜ தந்திரத்துடன் நடந்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் தொடர்பு கொண்டு மாலத்தீவு விவகாரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் செல்வ செழிப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் இந்த பேச்சின் போது உறுதிகொண்டனர். இத்தகவலை அமெரிக்கா வெள்ளை அறிக்கை மூலம் உறுதி செய்தது.

இலங்கையில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாட்டு தூதர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அவர்கள் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அவர்கள் காத்திருக்கின்றனர். மாலத்தீவு பிரச்சனைகள் குறித்து தெற்காசிய மனித உரிமை அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயக விரோதமாக மாலத்தீவு நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலை நிலவும் நிலையில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. மேலும் மாலத்தீவில் நடைபெறும் அரசியல் சூழ்நிலைகளை அறிய உண்மை கண்டறியும் குழுவை ஐ.நா. சபை அனுப்ப வேண்டும் என வலியுறுத்த உள்ளது. நட்பு நாடுகளுடன் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply