தமிழிசை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு: ஹென்றி திபேன் வலியுறுத்தல்

சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணித்த சக பயணியும் கனடாவில் பி.எச்.டி படித்து வருபவருமான லூயிஸ் சோபியா என்ற இளம் பெண் தமிழிசையை நோக்கி, ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கோஷமிட்டார்.

அதன்பின் தமிழிசைக்கும், சோபியாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, தமிழிசை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மறுநாள் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தற்போது சோபியா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சோபியாவை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ஹென்றி திபேன் அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”எழுத்தாளருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ அவையனைத்தும் சோபியாவுக்கும் உண்டு. தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.

மிக மோசமான, தவறான வார்த்தைகளில் மிரட்டியதற்கு, உயிருக்கு ஆபத்தை உருவாக்குவோம் என்று சொன்னவர்களுக்கு கண்டிப்பாக எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் செய்யவில்லை. இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்” என்றார் ஹென்றி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply