அமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒஹியோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் அன்ரூ பிரன்ஸனின் விடுதலை குறித்து அறிவிப்பதிலும், அவரை மீண்டும் நாட்டிற்குள் வரவேற்பதிலும் தான் பெருமையடைவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த பாதிரியார் பிரன்சன், அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களுக்கு மத்தியில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

அதற்கமைய துருக்கியிலிருந்து நேற்று புறப்பட்ட பாதிரியார் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஜேர்மனிக்கு சென்று அமெரிக்காவை வந்தடையவுள்ளார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக துருக்கியில் பணியாற்றிவந்த அன்ரூ பிரன்சன் என்ற பாதிரியார், கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டில் பிரகடனப்படுத்தியிருந்த அவசரகால நிலை, தையீப் எர்டோகன் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அண்மையில் நீக்கப்பட்டது. சிறைவைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவரை முழுமையாக விடுவித்து நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply