தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை :தலதா அதுகோரல 

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நீதியமைச்சர் கோரியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 103 கைதிகளுள் தற்போது 54 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றன.

அவர்களில் 45 பேர் தமிழர்களும், 6 பேர் சிங்களவர்களும், 3 பேர் முஸ்லிம்களுமாவர்.

அவர்கள் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து அவதானிக்கும்போது, அவை அரசியல் செயற்பாடா என்பது தமக்கு தெரியாது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இருவரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தமை குறித்து 3 அல்லது 4 பேர் சந்தேகத்துக்குரியவர்களாக உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே கொலை தொடர்பிலும், ஃபீல் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரைக் கொலை செய்ய முயற்சித்தமை குறித்தும் வழக்குகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், குறித்த விடயங்கள் அரசியல் நடவடிக்கைகளா என்பது தொடர்பில் தம்மால் உறுதிப்படுத்த முடியாது என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், இவை குறித்து நாட்டின் சட்டத்திற்கு அமைய, குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றங்கள் தொடர்பில் வழக்கு விசாரiணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேநேரம், வழக்கு நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று தண்டனை அனுபவிக்க சிறைப்படுத்தப்பட்ட 43 கைதிகள் உள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தரப்பினரை விடுதலை செய்யும் அதிகாரம் நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் தமக்கு இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா? என்ற கேள்வி தமக்கு உள்ளதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோ அல்லது சூழ்ச்சியில் ஈடுபட்டோ அரசியல் கைதிகளாக இருப்பார்களாயின், அது குறித்த சந்தர்ப்பத்திலும் தலையீடு செய்யலாம்.

எனினும், 2009 ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நோக்கலாம் என நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் உள்ளவர்கள் குறித்து மனிதாபிமான அடிப்படையில் நோக்க எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்சென்று வேறேதும் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமாயின் அதற்கான ஒத்துழைப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் வழங்க முடியும்.

அதனைத் தவிர்த்து, தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ள முடியாது என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில், குறித்த 54 பேர் தொடர்பான வழக்குகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வழக்குகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அதாவது ஜனவரி மாதமளவில் துரிதப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சட்டமா அதிபர் கூறியதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply