முன்னாள் இராணுவ அதிகாரி தேசிய பாதுகாப்பை தரம் குறைத்துப் பேசுவது தவறு : ஜனாதிபதி

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

நேற்று (16) இலங்கை இராணுவத்தினருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து தரக் குறைவாக பேசும் போது நாட்டு மக்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். அச்சம், பயம், சந்தேகம் என்பன அவர்களிடையே ஏற்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியன. ஒட்டுமொத்த தேசமும் என்றும் படையினருக்கு கடமைப்பட்டுள்ளது.

கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக படையினரின் அளப்பரிய சேவையினை குறைத்து மதிப்பிட இடமளிக்க முடியாதெனவும் அன்று இராணுவத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியவர்களே இன்று குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய அத்தகைய முறையற்ற கருத்துக்களை வெளியிடுதல் தொடர்பில் தான் பெரிதும் கவலையடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தற்போது அரசாங்கம் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து தேசிய பாதுகாப்பினை உயரிய அளவில் உறுதி செய்திருப்பதோடு மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலங்கையில் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply