ரஷ்யா மீது தடை கொண்டு வரும் விவகாரத்தில் அமெரிக்க எம்.பிக்கள் உடன்பாடு

ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா மீது தடை கொண்டு வர புதிய சட்டம் இயற்றுவதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாட்டை எட்டினர். ஏற்கனவே ரஷ்யா, ஈரான் மீது தடை கொண்டு வரும் சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் நிறுத்தி வைக்கப்பட்டது. குடியரசுக் கட்சியினர் இச்சட்டத்தில் வட கொரியாவையும் சேர்க்க வேண்டும் என்று கோரியதால் தடங்கல் ஏற்பட்டது. இரு சபைகளும் திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

 

எனினும் வட கொரியாவை சேர்த்திருப்பது செனட் சபையில் சட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றார் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் நான்சி பெலோசி. வட கொரியாவை இச்சட்டத்தில் சேர்க்காமல் இருப்பது ரஷ்யாவின் மீதான தடைச் சட்டத்தை நிறைவேற்றி அதிபரின் கையொப்பம் பெற அனுப்புவதில் தடங்கல் எதையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றார் பெலோசி.

 

ஆனாலும் ரஷ்யா மீது கடுமையாக நடந்து கொள்ள அதிபர் டிரம்ப்பை இச்சட்டம் எச்சரிக்கும் என்று பல உறுப்பினர்கள் கருதுகின்றனர். கடுமையான தடைகளை வலியுறுத்தும் சட்டம் தேவை என்றார் ஜனநாயக கட்சியின் செனட் தலைவர் சக் ஷூமர்.

 

ஐரோப்பா நாடுகள் எதிர்ப்பு

 

ரஷ்யா மீது அமெரிக்கா கொண்டு வரவுள்ள சட்டம் பற்றி ஐரோப்பிய நாடுகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அப்படியொரு தடைச் சட்டம் கொண்டு வரும் முன் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளன. அப்படி செய்யாவிட்டால் விளைவுகள் தொடர்ச்சியாகவும் விரிவான முறையிலும் இருக்கும் என்று கூறியுள்ளன. ஜெர்மன் தனது நிறுவனங்கள் மீது அமெரிக்க சட்டம் தடை விதித்தால் அதற்கு பதிலடி கிடைக்கும் என்று எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து ஜெர்மன் நிறுவனங்கள் பால்டிக் பிரதேசத்தில் குழாய்கள் அமைத்து எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ரஷ்யாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான கேஸ்ப்ரொம் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது.

 

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் குறிப்பாக உக்ரைனில் ரஷ்யாவின் நிலைப்பாட்டின் மீதும், அதனை முன் வைத்து ரஷ்யாவின் மீது தடைகள் கொண்டு வருவதிலும் இணைந்து கொண்டு வந்தது போன்ற ஒற்றுமை தேவை என்று கூறியுள்ளன. தவிர ரஷ்யாவிடம் மின்ஸ்க் அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் அவை கூறுகின்றன. மின்ஸ்க் ஒப்பந்தம் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த கொண்டு வரப்பட்டது.

 

மேலும் அமெரிக்காவின் தடைகள் உள்ளூர் அரசியலின் அடிப்படையில் நிகழ்கிறது என்றும் அவை கூறுகின்றன. ஒற்றுமை இல்லாத தடைகள் பலனளிக்காது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply