மேற்கு வங்காளத்தில் இந்தியர் யாரும் வெளியாள் கிடையாது : மம்தாவுக்கு மோடி பதிலடி

மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில், பா.ஜ.க., பிரதமர் மோடியை குறிப்பிடும்விதமாக, மேற்கு வங்காளத்தை டெல்லி அல்லது குஜராத்தை சேர்ந்த வெளியாட்கள் ஆள விடமாட்டேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசிவருகிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியின் சொந்த ஊரான கந்தியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

‘வந்தே மாதரம்’ முழக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்த மண், மேற்கு வங்காளம். இந்த மண்ணில் இருந்துகொண்டு, மம்தா, வெளியாள் என பேசி வருகிறார். பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற மாமனிதர்களின் பூமியான மேற்கு வங்காளத்தில், இந்தியர் யாரும் வெளியாள் கிடையாது. அவர்களும் பாரத மாதாவின் குழந்தைகள்தான்.

எங்களை சுற்றுலாவாசிகள் என்கிறீர்கள், கிண்டல் செய்கிறீர்கள், அவமதிக்கிறீர்கள். ரவீந்திரநாத்தின் மேற்கு வங்காளம் யாரையும் வெளியாளாக கருதாது.

மேற்கு வங்காள தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்போது, முதல்-மந்திரி இம்மண்ணின் மைந்தராக இருப்பார்.

உங்களுக்கு (மம்தா பானர்ஜி) காயம் ஏற்பட்டதாக நந்திகிராமையும், அதன் மக்களையும் ஒட்டுமொத்த தேசத்தின் முன்பு அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். இதே நந்திகிராம்தான் உங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. குற்றம்சாட்டிய உங்களை நந்திகிராம் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். உரிய பதிலடி கொடுப்பார்கள். மேற்கு வங்காளத்தில் ஒவ்வொரு திட்டத்தையும் பா.ஜ.க. ஊழலற்றதாக கொடுக்கும், வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும்.

‘வீட்டு வாசலில் அரசாங்கம்’ என்பது குறித்து மம்தா பேசிக்கொண்டிருக்கிறார். மே 2-ந்தேதி அவரே ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.’

இவ்வாறு மோடி பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply