வவுனியாவில் மின்விநியோக சேவையை மேம்படுத்த மின்சார சபை நடவடிக்கை

வவுனியா பிரதேசத்தின் மின் விநியோக சேவையை மேம் படுத்துவதற்காக 20 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய மின் மாற்றியொன்று கொழும்பிலிருந்து அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. வடபகுதியை 180 நாட்களில் அபிவிருத்தி செய்யும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வத்தளை அனியக்கந்தையில் அமைந்துள்ள மின்சார சபைக்குச் சொந்தமான கிளை மின் நிலையத்திலிருந்து 65 தொன் நிறையுள்ள இந்த மின்மாற்றி கடந்த வாரம் வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை கூறியுள்ளது.

வவுனியா கிளை மின்நிலையத்தில் இருந்து தற்போது வழங்கப்பட்டு வருகின்ற 20 மெகாவோட்ஸ் மின்சாரம் 50 மெகாவோட்ஸாக இந்த புதிய மின்மாற்றியின் மூலம் அதிகரிக்கப்படும் என்றும் இந்த மின்சக்தியை 60 மெகாவோட்ஸாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் குணவர்தன, பிரதி பொது முகாமையாளர் பி.எஸ்.பி.மெண்டிஸ், வவுனியா மற்றும் கிளிநொச்சி கிளை மின் நிலையங்களின் முகாமையாளர்கள் எச்.டி. ஏ. பீரிஸ், அனுருத்த திலகரத்ன ஆகியோர் இந்த பாரிய மின்மாற்றியை வவுனியா கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். வடக்கின் வசந்தத்தின் கீழ் 6 பில்லியன் ரூபா செலவிலான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு வருடங்களில் வடமாகாணம் முழுவதற்கும் சீரான மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் முதற்கட்டம் அடுத்த வருடம் முற்றுப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மின்சாரம் விநியோகிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இரணைமடு பகுதியில் முதலாவது மின்மாற்றி பொருத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply