சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே அமெரிக்கா எதிர்பார்க்கிறது : ஜோ பைடன்

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே சமீபகாலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டுகள் பதவி காலத்தில் முன்னேப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.
டிரம்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆட்சி பொறுப்புக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனா விவகாரத்தில் பெரும்பாலும் முந்தைய ஆட்சியின் கொள்கைகளை கடைபிடித்து வருகிறார். இதனிடையே ஜனாதிபதியாக பொறுப்பேற்றதற்கு பிறகு ஜோ பைடன் 2 முறை சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஜோ பைடன் விரும்புகிறார். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு ஜின்பிங் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வருவதால் நேரடி சந்திப்புக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் மாலை காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசினர். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடந்த இந்த முதல் காணொலி சந்திப்பு 3½ மணி நேரம் நீடித்தது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதல் நேரம் ஆகும். இரு தலைவர்களும் அமெரிக்கா-சீனா உறவுகளை நேர்மறையான திசையில் முன்னோக்கி நகர்த்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தி இந்த சந்திப்பை தொடங்கினர்.
அப்போது ஜோ பைடன் “நீங்களும் நானும் முறையாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும், நான் முறையாக பேசத் தொடங்க வேண்டும் என்று கருதுகிறேன். நாம் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நிறைய நேரம் செலவிட்டோம், இன்று நாம் ஒரு நேர்மையான உரையாடலை நடத்த முடியும் என்று நம்புகிறேன்” என கூறினார்.
தொடர்ந்து ஜின்பிங் பேசுகையில் “இது நேரில் சந்தித்து பேசுவதை போல் சிறப்பாக இல்லை என்றாலும். எனது பழைய நண்பரை (ஜோ பைடனை) பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியை மட்டுமே அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்றும் அது ஒருபோது மோதலாக மாறிவிடக்கூடாது என்றும் ஜோ பைடன் வலியுறுத்தினார்.
இதுபற்றி அவர் பேசுகையில் “நான் முன்பே கூறியது போல், இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டியானது, நோக்கம் கொண்டதாகவோ அல்லது திட்டமிடப்படாததாகவோ, மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதே, சீனா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகிய நமது பொறுப்பாக எனக்கு தோன்றுகிறது” என்றார்.
மேலும் அவர் அனைத்து நாடுகளும் பின்பற்றும் விதிகளை சீனாவும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய ஜோ பைடன், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் ஒருபோதும் எங்கள் விவகாரங்களிலிருந்து பின்வாங்கியதில்லை என்றும் கூறினார்.
ஒன்றாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பேசிய ஜின்பிங் இருநாடுகளும் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் ஒன்றாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “சீனாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்; அமைதியாக இணைந்து வாழ வேண்டும்; பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை பேண வேண்டும்; அவர்களின் உள் விவகாரங்களை சரியாகத் தீர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களின் சர்வதேச கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்” என கூறினார்.
சீனா மற்றும் அமெரிக்காவை பெருங்கடலில் பயணிக்கும் ராட்சத கப்பல்களுடன் ஒப்பிட்டு பேசிய ஜின்பிங், இரு கப்பல்களும் ஒன்றோடு ஒன்று மோதல் இருக்க வேண்டும் என்றும் மாறாக திசையையோ வேகத்தையோ இழக்காமல் ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply