இலங்கையிலுள்ள பெண்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்படுகிறார்கள்
கொழும்பு, இலங்கை இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் கொவிட்-19 நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு இலங்கையின் நான்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளை வலியுறுத்தியுள்ளனர்.
மார்ச் முதல் செப்டம்பர் வரை, ஒன்பது மாவட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்தரப்பு உரையாடல்களை ஐ.நா பெண்கள் அமைப்பு நடாத்தியது. வடமத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமர்வுகளில் பெண் தலைவர்கள் உட்பட 200 பேர் கலந்துகொண்டனர்.
பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களின் பற்றாக்குறை, கிடைக்கக்கூடிய சேவைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் வன்முறையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கான பலவீனமான ஆற்றுப்படுத்தல் அமைப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கவலைகளை எழுப்பினர்.
“கடந்த சில மாதங்களில், பெண்களுக்கு எதிரான வன்முறை முறைப்பாடுகள் கடுமையாக அதிகரித்துள்ளதுடன், பெரும்பாலான நேரங்களில், இந்த பெண்கள் செல்வதற்கு எந்த இடமும் இருப்பதில்லை” என்று ஒரு உரையாடல் பங்கேற்பாளரான, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கூறினார்.
மற்றொரு பங்கேற்பாளரும், மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கூறியதாவது: பொருளாதார நெருக்கடி காரணமாக, பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. சில பெண்கள் இந்தத் தொழிற்சாலைகளில் இருபதிற்கும் மேற்பட்ட வருடங்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்கு சுமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால், அவர்களால் புதிய பணி வாய்ப்பை கண்டறிய முடியாதுள்ளது.
(பங்கேற்பாளர்கள் உணர்வுபூர்வமான தலைப்புகளில் சுதந்திரமாகப் பேசுவதை உறுதிசெய்ய, ஐ.நா. பெண்கள் அமைப்பு அவர்களின் பெயர்களை வெளியிடாதிருக்க ஒப்புக்கொண்டது.)
பல்தரப்பு உரையாடல்கள், “பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டலை கூட்டாக ஊக்குவித்தல் மற்றும் பல ஆண்டுகளாக பெறப்பட்ட ஆதாயங்கள் திரும்ப மாற்றமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக” பெண் தலைவர்கள், பொதுத்துறை உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகள், இளைய தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களை ஒன்று சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்று ஐ.நா பெண்களின் இலங்கையின் நாட்டிற்கான பிரதிநிதியான ரமாயா சல்காடோ கூறினார்.
ஒவ்வொரு உரையாடலிலும், பங்கேற்பாளர்கள் மாவட்ட அளவிலான “வேலைத்திட்டங்களை” உருவாக்கியதுடன், அதில் அவர்கள் உள்ளூராட்சி சபைகளுக்குப் பின்வருவனவற்றை பரிந்துரைத்தனர்:
• பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகளை அமுலாக்க முன்னரங்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்
• ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களை அமைப்பதற்கு பாதீடு மற்றும் ஏனைய வழங்கல்களை ஒதுக்கீடு செய்தல்
• வன்முறையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கான சட்ட உதவி மற்றும் ஆலோசனை போன்ற பொதுச் சேவைகள் தொடர்பில் கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்.
• பொலீஸ் மற்றும் பிற சட்ட அமுலாக்க உத்தியோகத்தர்களுக்கு பால்நிலை-உணர்திறன் பயிற்சிகளை வழங்குதல்
உரையாடல் அமர்வுகளின் போது, பங்கேற்பாளர்கள் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் பற்றிய பயிற்சியை பெற்றதுடன், இது தீர்மானமெடுக்கும் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அழைப்பு விடுப்பதுடன் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் பின்தங்கியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஐ. நா பெண்கள் அமைப்பு 2018 மற்றும் 2022 க்கு இடையில் நாட்டின் ஐந்து மாகாணங்களின் 16 மாவட்டங்களில் பல்தரப்பு உரையாடல்களின் முதற் கட்டத்தை ஏற்பாடு செய்ததுடன், இது சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் தீர்மானமெடுக்கும் வகிபாகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. உரையாடலின் தற்போதைய கட்டம் நாட்டின் எஞ்சிய நான்கு மாகாணங்களை உள்ளடக்குவதுடன் அது அனுராதபுரம், பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றன.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் ஐ.நா பெண்கள் அமைப்பின் மூன்றாண்டு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
—
ஐ.நா. பெண்கள் அமைப்பு – ஐ.நா. பெண்கள் அமைப்பு என்பது பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நா அமைப்பு ஆகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உலகளாவிய வெற்றிகரமான அமைப்பான ஐ.நா. பெண்கள் அமைப்பு உலகளவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னேற்றத்தை துரிதப்படுத்த நிறுவப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply