இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார். இந்தப் பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்குச் சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர். இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார். இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என சூளுரைத்தார். இந்நிலையில், இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கராச்சியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
பைசலாபாத் நகரில் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply