வடக்கில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை விரைவாக மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அங்கஜன் ராமநாதன்
நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வித்தியாசமான சுற்றுலாத் தலங்களை உருவாக்க முடியும். அதனால் வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருக்கின்றாேம்.
அத்துடன் வடக்கில் பொது மக்களின் காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றபோதும் அதிகாரிகளின் அசமந்தம் காரணமாக பல ஏக்கர் காணிகள் விடுக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றை விரைவாக மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் 30 வீத நிலப்பரப்பை கொண்ட வடக்கு மாகாணம் விவசாய பொருளாதாரத்திற்கு சிறந்த பங்களிப்பு வழங்க முடியும். எனினும் சிலரது சுயநல செயற்பாட்டால் அதற்கான பிரதிபலன் இல்லாமல் போயுள்ளது.
நீண்ட காலமாக பொதுமக்களின் காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அந்தப் பிரச்சினை இன்னும் முற்றாக தீர்க்கப்படவில்லை. அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் அதற்கு முக்கிய காரணமாகும்.
வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாத மக்களின் காணிகள், கட்டிடங்கள், பாடசாலைகள், வீதிகள், கோவில்கள் ஆகியவற்றை விரைவாக விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் மக்களின் காணிகள்இதுவரை 20 ஆயிரத்து 822 ஏக்கர் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் மேலும் 3,027 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளன.
அதேவேளை, அந்த காணியில் 1617 ஏக்கர் காணியை படையினருக்கு வழங்குவதற்காக காணி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. அது தொடர்பில் மக்கள் தமது எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
பலாலி விமான நிலைய ஓடு பாதையை விஸ்தரிப்பதற்காக மேலும் காணிகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. எனினும் ஏற்கனவே மக்களால் வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நட்ட ஈடு வழங்கப்படாத நிலையில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் வடக்கில் பல முக்கிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க முடியும். அவுஸ்திரேலியாவில் உள்ளது போன்று குறிக்கட்டுவான் படகு துறைமுகம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் இராமேஸ்வரத்தில் ராமர் -சேது பாலம் மற்றும் உயர்ந்த கோபுரம் காணப்படுவது போன்று இலங்கையிலும் தலைமன்னாரில் அது போன்ற கோபுரத்தை ஸ்தாபிக்க முடியும் .
இலங்கையிலும் தலைமன்னாரிலிருந்து இந்தியாவை பார்க்கக்கூடிய வகையில் கோபுரம் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகள் போன்று வடக்கிலும் சுற்றுலா துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply