இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று காலை ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. பிரதமர் உட்பட ஏனைய பிரதம அதிதிகளின் வருகையை அடுத்து எட்டு மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருகை தருவார்.
ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றப்பட்டதையடுத்து ஜயமங்கள கீதம் இசைக்கப்பட உள்ளது. அதனை அடுத்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார்.
அவரது உரையை அடுத்து முப்படைகளின் படை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 9.40 மணியளவில் நிறைவடையவுள்ளன.
நிகழ்வுகளுக்கான பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகள் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படை வீரர்களின் எண்ணிக்கை 1511ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இம்முறை 4421 முப்படை வீரர்கள், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மரியாதை அணிவகுப்புக்களில் பங்கேற்கவுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) அடிப்படையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது சுதந்திர தின கொண்டாட்டம் இதுவாகும்.
அத்தோடு தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படவுள்ளன.
கடந்த ஆண்டு 19 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது.
முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு மாத்திரமே இடம்பெறவுள்ளது. அத்தோடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையும் இடம்பெறவுள்ளது.
77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது நிர்வாக அமைச்சினால் அரச நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் தொடர்பில் புதுப்பிக்கத்தக்க சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 10ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த சுற்று நிரூபத்தில் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும், 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் மின்சார வீண்விரயத்தைத் தடுக்கும் நோக்கில் மின் அலங்காரம் செய்ய வேண்டும் என்ற அறிவித்தலை இரத்து செய்து புதுப்பிக்கப்பட்ட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கைதிகளுக்கு வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணிமுதல் சுதந்திர சதுக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 1000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்தார்.
இம்முறை பொது மக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply