2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திங்கட்கிழமை (24) 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெருமதிமிக்க குஷ் கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு பயணி ஒருவரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தடுத்து வைத்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது குறித்த பயணியின் சந்தேகத்திற்கிடமான பயணப் பொதியில் இருந்து குஷ் என்னும் மேம்படுத்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான ஹைபிரிட் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் போதைப்பொருளுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட நிலையில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருளை சிறிய பஞ்சிங் பேக் (punching bag) மற்றும் இனிப்பு பைக்கற்றுகளினுள் வைத்து பயணப் பொதியில் சூட்சுமமான முறையில் மறைத்து குறித்த நபர் அவற்றை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 908 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 2 கோடியே 30 இலட்சம் ரூபா என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் 73 வயதுடைய இந்திய பிரஜை ஆவார். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் கைதான வெளிநாட்டுப் பயணி மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply