புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும் தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம் : நீதி அமைச்சர்
வட, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த திட்டமிடலுடன் புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும். தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம். வங்குரோத்து அரசியலுக்காக இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாப்புருவாக்க வாக்குறுதியை மக்களுக்கு வழங்கினோமே தவிர எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு அமைய செயற்பட போவதில்லை.முறையான திட்டம் வழிகாட்டலுக்கு அமைவாக புதிய அரசியலமைப்பினை வெகுவிரைவில் உருவாக்குவோம்.
வடக்கு ,கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த மாற்றத்துக்காகவே தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணையை நாங்கள் பாதுகாப்போம். பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுப்போம்.
இழப்பீட்டு அலுவலகத்துக்காக 2353 மில்லியன் ரூபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கு 139 மில்லியன் ரூபா, காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 126 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மனித புதைகுழிகள், விகாரைகள் தொடர்பில் பேசப்படுகிறது. ஒருசில அரசியல்வாதிகள் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.யாழ் தையிட்டி விகாரைக்கு சென்று பல விடயங்களை அறிக்கையிட்டுள்ளோம்.
வங்குரோத்து அரசியலை மீண்டும் உருவாக்குவதற்கு இனவாதம் மற்றும் மதவாதம் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் சிறந்த முறையில் முரண்பாடற்ற வகையில் தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply