இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முன்மொழிவுடனான புதிய தீர்மானம் அவசியம் : இணையனுசரணை நாடுகளிடம் கஜேந்திரகுமார் கடிதம் மூலம் வலியுறுத்தல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்திருப்பதுடன் உள்ளகப்பொறிமுறை மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முன்மொழிவை உள்ளடக்கிய புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் ஜெனிவாவில் உள்ள இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

2021 ஜனவரி 15 ஆம் திகதி தமிழ்த்தரப்பு கூட்டாக அனுப்பிவைத்திருந்த கடிதத்திலும், 2021 பெப்ரவரி 24, 2021 செப்டெம்பர் 8 மற்றும் 2022 பெப்ரவரி 25 ஆகிய திகதிகள் இடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட எம்மால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களிலும் நாம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் அரசாங்கங்களின் நிலைப்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம். 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், நாம் கடிதங்கள் ஊடாக விடுத்த ஒவ்வொரு எச்சரிக்கையும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் மிகமோசமானது எனவும், அச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் நீதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதன் ஊடாக மாத்திரமே எதிர்வருங்காலத்தில் இத்தகைய பாரிய அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்கமுடியும் என்பதுடன், அச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக புதிய சட்டம் எதுவும் கொண்டுவரப்படக்கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

வட, கிழக்கு மாகாணங்களை சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன இலாகா, தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட கட்டமைப்புக்களின் ஊடாக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும் காணிகள், சிறுபான்மையினத் தமிழர் தாயகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் நோக்குடன் சிங்கள குடியேற்றத்திட்டங்களுக்காக வழங்கப்படுகின்றன.

அதேபோன்று தமிழர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மீன்பிடித்துறையைத் தளர்த்தும் வகையில் வட, கிழக்கு மாகாணங்களின் கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நாட்டின் ஏனைய பகுதிகளைச்சேர்ந்த சிங்கள மீனவர்கள் கடற்படையினரால் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதுமாத்திரமன்றி இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை இன்னமும் தாமதப்படுத்துவது, பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலிருந்து தமிழ் மக்களை மேலும் தூரமாக்கும். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்திருப்பதுடன் உள்ளகப்பொறிமுறை மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முன்மொழிவை உள்ளடக்கிய புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply