மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரம் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் : ஸ்ரீநேசன்

மடக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடற்றொழில் நீரியல் வளம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட பல உற்பத்தி முயற்சிகள் விடுபட்டு கிடக்கும் நிலையில் உள்ளதை குறிப்பிட வேண்டும். கடற்றொழில் அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மட்டக்களப்பு தர்மபுரம் கடற்கரை ஓரத்தில் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிலையம் செயற்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அது இயங்காது பூச்சிய நிலையில் உள்ளது.

எனவே அதனை மீளவும் ஆரம்பிக்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். அத்துடன் புதுக்குடியிருப்பில் கிரான் குளத்தை அண்டிய பிரதேசத்தில் மின்குஞ்சுகளை உற்பத்தி செய்ய அமைக்கப்பட்ட நிலையமும் தற்போது இயங்காது இருக்கின்றது. இதனையும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை கல்லடி பிரதேசத்தில் ஐஸ் உற்பத்தி கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனையும் செயற்படுத்த வேண்டும். வாகரை வட்டவான் பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டம் நடத்தப்பட்டது. அங்கே உள்ளூர் சமுகத்தினர் இரால் வளர்ப்பில் ஈடுபடும் நிலையில் அவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படவில்லை. இதனை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கே கம்பனி மூலம் 100 ஏக்கரில் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளனவா என்றும் பரிசீலனை செய்ய வேண்டும்.அத்துடன் மின்பிடித்துறையை விருத்திச் செய்யக் கூடிய நிலையமொன்று கல்லடியில் உள்ளது. அதனையும் இயங்கச் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கதிரவெளி முதல் கல்லாறு வரையிலான கடற்கரை மின்பிடிக்கு மிகவும் வசதியாக உள்ளன. இதனால் இந்தப் பிரதேசத்தில் மின்பிடி அபிவிருத்தியை செய்ய வேண்டும். கதிரவெளி வாகரையில் இருந்து மீன்பிடிக்க உகந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மீன்பிடிப்பதற்கான வசதிகள் இருந்தாலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படவில்லை. அதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலுவூட்டல் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பில் கூறும் போது கசிப்பு மற்றும் போதைப் பொருள் இவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. சமுகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாச்சாரத்தை உருவாக்குகின்றனர்.

ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். சமூக விரோத செயற்பாடுகளையும் தடுக்க வேண்டும். கசிப்பு உற்பத்தி விடயத்தில் பொலிஸார் உற்பத்தியாளர்களுக்கு சார்பாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சமூகத்தில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் அவற்றை ஒழிக்க வேண்டும் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply