மனிதனுக்கும் சூழலுக்குமிடையிலான உறவில் ஏற்படும் விரிசலால் இயற்கை வளங்களை இழக்க நேரிடுவது கவலைக்குரியது : பிரதமர்

மனிதகுலத்திற்கும் சூழலுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் விரிசலின் காரணமாக இயற்கை வளங்கள் பெருமளவில் இழக்க நேரிடுவது உண்மையிலேயே கவலைக்குரிய விடையமாகும் என சுற்றாடல் தின செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றாடல் தின செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது இலங்கை தேசமானது, ஒரு தனித்துவமான சமுத்திர வலயத்தால் சூழப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நதிகளைக் கொண்ட, தீவு முழுவதும் பரந்துகாணப்படும் தரமான மண் அடுக்குகள் மற்றும் வியத்தகு உயிர் பல்வகைமை ஆகியவற்றைக் கொண்ட ஒரு எழில்மிகு சுற்றாடல் முறைமையாகும்.

இந்த தனித்துவமான சூழல் பன்முகத்தன்மை காரணமாக, ஒரு நாடு என்ற வகையில் நமது நாடு உலகளாவிய கவனத்தை ஈர்த்துவருகின்றது. இருப்பினும், பல தசாப்தங்களாக சூழலியல் பெறுமானங்களைப் பாதுகாப்பதில் விட்ட கவனக்குறைவினால் நீர் வளங்கள், உயிரியல் வளங்கள் மற்றும் வளமான மண் ஆகியவற்றை இழந்து வருகிறோம்.

மனிதகுலத்திற்கும் சூழலுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் விரிசலின் காரணமாக இயற்கை வளங்கள் பெருமளவில் இழக்க நேரிடுவது உண்மையிலேயே கவலைக்குரிய விடையமாகும்.

இந்த மண்ணில் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். தேசிய மக்கள் சக்தியாக, அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலைபேறான சூழல் என்ற தொலைநோக்கினை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கருத்திற் கொண்டு,சூழல் நீதி மற்றும் சமத்துவத்திற்காக நாம் அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய உறுதிபூண்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்பதாகும். அரசாங்கமாகவும் பொதுமக்களாகவும் Clean sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம், பிளாஸ்டிக்கினால் உபயோகத்தினால் எமது சூழல் அழிவுக்குள்ளாவதை துரிதமாக தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

மே மாதம் 30 ஆந் திகதி ஆரம்பமான சுற்றாடல் வாரம், எம்மைச் சுற்றியுள்ள சூழல் முறைமையின் பெறுமானங்களை விளங்கி, அதைப் பாதுகாக்க நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கவும், அதற்காக செயற்திறமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்

“துளிர்த்து வளர வழிவிடுவோம்” என்பது இந்த ஆண்டு தேசிய சுற்றாடல் தின கருப்பொருளாகும். இலங்கை என்ற நாமம் உலகில் உயர்ந்துநிற்க, இந்த தேசத்தின் சூழல் முறைமைக்கும் இத்தேசத்தின் பிள்ளைகளான அனைத்து மனிதர்களினதும் மானிடப் பண்புகள், சமூக அந்தஸ்து மற்றும் அவர்களது பொருளாதாரம் ஆகியன துளிர்த்து செழித்து வளர வழிவகுக்கும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply