கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி, ரவி உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது : அமைச்சர் பிமல் ரத்நாயக்க
கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது. ஆனால் எமக்கு எந்த தனிப்பட்ட தேவையும் கிடையாது. எனவே நாம் விசாரணைகளுக்காக திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை (17) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்குமாறு கர்தினால் உட்பட கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறது. எம்மிடம் மாத்திரமல்ல. இதற்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கத்திடமும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை மறைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு வழிமுறையே அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குவதாகும். இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததன் பின்னர் சி.ஐ.டியில் இருந்த 600 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கினார். அதேபோன்று அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களை திரட்டும் திறமையான அதிகாரிகளுக்கு பதிலாக திறமையற்ற அதிகாரிகளை பதவிகளுக்கு அமர்த்தினார்கள்.
ரணில் -ராஜபக்ச தரப்பு ஊழல் மோசடியில் ஈடுபட்டது ஒருபுறம் இருக்க பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிவற்றை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினார்கள்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள திறமையான அதிகாரிகளை நியமிக்குமாறு கர்தினால் மாத்திரம் அல்ல முழு கத்தோலிக்க சமூகமும் எம்மிடம் கோரிக்கை விடுத்தது.
பிரகீத் எக்னெலிகொட காணமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது சி.ஐ.டியின் பணிப்பாளர் ஷானி அபேசேகர முக்கிய சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது. ஆனால் எமக்கு எந்த தனிப்பட்ட தேவையும் கிடையாது. எனவே நாம் விசாரணைகளுக்காக திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply