எம்.பி.க்கு ரூ. 54,285 சம்பளத்துடன் எரிபொருள், தொலைபேசி கொடுப்பனவு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதச் சம்பளமாக 54,285 ரூபாவும் எரிபொருள், தொலைபேசி உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதி குழுக்களின் தலைவர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஆகியோர் தமக்கான எரிபொருள் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில்லை. ஆளும் தரப்பு எம்.பி. களின் மாதச் சம்பளம் ஜே.வி.பி.யின் நிதியத்துக்கு செல்கிறது என்பது புதிய விடயமல்ல எனவும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது 54,285 ரூபா மாத சம்பளம், உபசரிப்பு கொடுப்பனவு 1,000 ரூபா , சாரதி கொடுப்பனவு 3,500 ரூபா, (பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சாரதியை பெற்றுக்கொண்டால் பாராளுமன்றத்தின் ஊடாக 3,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது). தொலைபேசி கொடுப்பனவு 50,000 ரூபா, போக்குவரத்து கொடுப்பனவு 15,000 ரூபா, அலுவலக கொடுப்பனவு 100,000 ரூபா, கூட்டத்தொடருக்கான கொடுப்பனவு (நாள் ஒன்றுக்கு) 2,500 ரூபா, பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபா (நாளொன்றுக்கு) பாராளுமன்ற குழுக்களில் கலந்துகொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு), பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வு இல்லாத நாட்களில் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு) என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று எம்.பி. களின் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. தேசியப் பட்டியல் உறுப்பினருக்கு மாதாந்தம் 419.76 லீற்றர் எரிபொருளுக்கான சந்தைப் பெறுமதிக்குரிய கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. நயன வாசலதிலக எம்.பி.க்குரிய சம்பளத்தை தான் பெற்றுக்கொள்ள போவதில்லை என 2025.08.20ஆம் திகதியன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். அதற்கமைய அவருக்கு அது வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply