தேசிய பாடசாலைகளில் 200 பேருக்கு ஆசிரியர் நியமனம் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர்

தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலமொழி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 200 பேருக்கு எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்குள் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலமொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு செயன்முறைப் பரீட்சை மற்றும் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 200 பேருக்கு ஆசிரியர் நியமனக் கடிதம் வழங்க கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் அழைக்கப்பட்டு பின்னர் வேறு தினத்தில் மீண்டும் அழைப்பதாகக் கூறி நியமனம் வழங்கப்படாதுள்ள ஆசிரியர்கள் தொடர்பாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதமரின் கவனத்தில் முன்வைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலமொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2024.03.02ஆம் திகதி எழுத்து மூல பரீட்சை நடத்தப்பட்டு அதில் சித்தி பெற்றவர்களுக்கு அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம், 30ஆம் திகதிகளிலும் 2025.05.02ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதிவரை கல்வி அமைச்சில் செயன்முறை மற்றும் பொது நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன. அந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் நியமன கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக 2025.10.22ஆம் திகதி மு.ப.​ை9.00 மணிக்கு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்துக்கு வருமாறு 2025.10.08 ஆம் திகதிய கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் 2025.10.10 ஆம் திகதி கடிதம் மூலம் அந்நியமன நிகழ்வு குறித்த திகதியில் நடைபெறாது எனவும், பிறிதொரு திகதியை அறிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் எவருக்கும் இற்றை வரையும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாதுள்ளன” என்று பிரதமரின் கவனத்தில் முன்வைத்தார்.

இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய பிரதமர், சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டறிந்ததோடு, போட்டி, செயன்முறை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனம் வழங்க அழைக்கப்பட்டும் பிறிதொரு தினத்தில் நியமனம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 31ஆம் திகதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply